மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர் பொறிக்க கோரிய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பொறிக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.;

Update: 2022-11-02 00:59 GMT

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயரை பயன்படுத்த கோரி அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி, 'பிரேசில் போன்ற நாடுகளில் தேர்தல் சின்னங்கள் பயன்படுத்துவதில்லை' என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'தேர்தல் சின்னங்கள் அரசியலமைப்பு சாசனத்துக்கு முரணானது என்கிறீர்களா' என வினவியதுடன், 'இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தீர்களா?' என்றும் கேட்டனர்.

இதற்கு மனுதாரர் தரப்பில் இல்லை என்றும், கோரிக்கை மனு அளிக்கும் பட்சத்தில் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆர்.வெங்கடரமணி, 'இந்த பொதுநல மனுவில் உள்ள கருத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இறுதியில் வருகிறது. வேட்பாளர் தேர்வு என்பது முன்னரே நடைபெற்று, அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டியுள்ளது. அரசியலில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிகரிப்பது என்ற விவகாரம் இதில் தொடர்புடையது அல்ல. எனவே, இந்த பொதுநல மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல' என வாதிட்டார்.

கோரிக்கை மனு அளிக்கும்பட்சத்தில் அது பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அமித்சர்மா தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயரை பயன்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மறுத்ததோடு அதனை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்