'டிஜிட்டல் முறையில் அனைத்து ஆவணங்களையும் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

எல்லா மாவட்ட கோர்ட்டுகளிலும் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-04-27 21:53 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருடைய மேல்முறையீட்டு வழக்கை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் விசாரணை கோர்ட்டின் ஆவணங்கள் இல்லாத நிலையில், மேல்முறையீட்டு கோர்ட்டு (ஐகோர்ட்டு) அவரது தண்டனையை உறுதிசெய்து. அபராதத் தொகையை உயர்த்தி இருக்க முடியுமா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பி பரிசீலித்தது. விசாரணை முடிவில், ஊழல் வழக்கில் தண்டித்து அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரத்து செய்தனர்.

டிஜிட்டல் முறையில் பதிவு

அத்துடன் மாவட்ட கோர்ட்டுகளில் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்று அதிரடியாக ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஆவணங்களை டிஜிட்டல்முறையில் பதிவு செய்து பாதுகாப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் இ-குழு 2021-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (எஸ்.ஓ.பி.) வெளியிட்டுள்ளது.

நீதித்துறை நடைமுறையின், சுமூகமான செயல்பாட்டை எளிதாக்கும் வகையில், அனைத்து ஆவணங்களின் முறையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஒரு வலுவான பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

'உறுதி செய்யுங்கள்'

தற்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எனவே நாட்டில் உள்ள எல்லா மாவட்ட கோர்ட்டுகளிலும் அனைத்து கிரிமினல் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளின் ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மேல்முறையீட்டுக் காலத்திற்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும். இதை ஐகோர்ட்டுகளின் பதிவாளர் ஜெனரல்கள் உறுதி செய்ய வேண்டும்.

இது நடைமுறைக்கு வந்த உடன், அவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்