பல்லாரிக்கு செல்ல ஜனார்த்தன ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
மகளுக்கு குழந்தை பறிந்துள்ள நிலையில் அவர்களை பார்ப்பதற்காக பல்லாரிக்கு செல்ல ஜனார்த்தன ரெட்டிக்கு சுப்ரீம் கோர்டு அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு:
பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. முன்னாள் மந்திரியான இவர் சுரங்க தொழிலும் செய்தார். இந்த நிலையில் கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் பல்லாரிக்கு செல்ல கூடாது என்று நிபந்தனையிட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கும்படியும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவிட்டது.
இந்த நிலையில் பல்லாரியில் வசித்து வரும் ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்து இருந்தது. இதனால் தனது மகளையும், குழந்தையையும் பார்க்க பல்லாரி செல்ல அனுமதி வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டில், ஜனார்த்தன ரெட்டி மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நடந்தது. அப்போது அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி வரை பல்லாரியில் தங்க ஜனார்த்தன ரெட்டிக்கு, நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.