ஊழல் தடுப்பு படை ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு;விரைவில் விசாரணை
கர்நாடக ஐகோர்ட்டால் ஊழல் தடுப்பு படை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக ஐகோர்ட்டால் ஊழல் தடுப்பு படை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரத்தை இழந்தது
கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டது. இதனால் லோக்அயுக்தா கட்டுப்பாட்டில் இருந்த போலீஸ் பிரிவு அந்த தடுப்பு படைக்கு மாற்றப்பட்டது. இதனால் லோக்அயுக்தா, ஊழல் புகாருக்கு ஆளாகும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரத்தை இழந்தது.
ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கர்நாடக அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதாவது ஊழல் தடுப்பு படை கலைக்கப்பட்டது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை கண்டு பா.ஜனதா சற்று அதிர்ந்து போனது. பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்துவிட்டு லோக்அயுக்தாவை மீண்டும் பலப்படுத்துவோம் என்று கூறியிருந்தது.
மேல்முறையீட்டு மனு
இதையடுத்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் சட்டத்துறையின் ஆலோசனையை கேட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். மேலும் தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா கூறிய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காந்தராஜ் என்பவர் சார்பில் வக்கீல் அசோக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில், ஊழல் தடுப்பு படை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், லஞ்சம் கேட்ட மின்துறை என்ஜினீயர்கள் 2 பேருக்கு எதிரான தான் ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்து அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பால் அந்த விசாரணைக்கு தொந்தரவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அந்த தீர்ப்பை ரத்து செய்யுமாறும் காந்தராஜ் கோரியுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.