பிரபல ரவுடிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தாவணகெரேவில் பிரபல ரவுடிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சிரிக்கை விடுத்துள்ளார்.;
சிக்கமகளூரு:-
கர்நாடகத்தில் அடுத்த 4 மாதங்களுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தாவணகெரே டவுன் பகுதியில் உள்ள பிரபல ரவுடிகளை ஆயுதப்படை மைதானத்தில் ஒன்றாக அழைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யன்ந்த் எச்சரிக்கை விடுத்தார். இதில் டவுன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய ரவுடிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டது. தேர்தல் நேரங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதித்தில் யாரும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொலை உள்ளிட்ட குற்றச்சம்பங்களில் யாரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கருணை காட்டப்படாது. சட்ட நடவடிக்கை பாயும். எனவே குடும்பத்தை கருத்தில் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல், சுயதொழில், வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்துமாறு அவர்களை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.