நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்-புதிய தகவல் அம்பலம்

திகார் சிறையில் தன்னை சந்தித்த ஒரு நடிகையிடம் சுகேஷ் சந்திரசேகர், மண்டியிட்டு கெஞ்சிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2023-01-29 01:06 GMT

புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் இருந்தவாறே, ரூ.200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவரோடு ஏற்கனவே நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர் பேசப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய நடிகைகள் உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சமீபத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

அதைப்போல நடிகை சாகத் கன்னாவும் ஆஜராகி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சுகேஷ் சந்திரசேகருடனான சந்திப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகை கூறிய தகவல்கள் வருமாறு:-

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் டெல்லியில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அங்கு செல்ல நான் மும்பை விமான நிலையம் வந்தேன். அப்போது ஏஞ்சல் என்கிற பெண் எனக்கு அறிமுகம் ஆனார். இவர்தான் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இரானி என்பது எனக்கு பின்னர்தான் தெரியும். அவரும் என்னோடு டெல்லி வருவதாக கூறினார்.

நாங்கள் டெல்லியில் இறங்கியதும் காரில் பள்ளிக்கு புறப்பட்டோம். ஆனால் வழியில் மற்றொரு காரில் ஏஞ்சல் என்னை ஏற்றினார். அந்த கார் திகார் சிறைக்கு சென்றது. நான் இது தவறான வழி என கூறினேன். அதற்கு ஏஞ்சல், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் எனக்கூறி சுகேசின் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அந்த அறையில் விலைஉயர்ந்த ஆடம்பர பொருட்கள் இருந்தன. அங்கிருந்த நபர் (சுகேஷ்) தன்னை சேகர் ரெட்டி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் விலைஉயர்ந்த வாசனைத்திரவியம் அடித்து இருந்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும், டி.வி. சேனல் வைத்திருப்பதாகவும் கூறினார். தேர்தலின்போது மின்னணு எந்திரத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் இருப்பதாகவும், பெரிய புள்ளி என்பதால் ராஜமரியாதை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

நான் நடித்த டி.வி. சீரியல்களை விரும்பி பார்த்ததாகவும், என்னை மிகவும் பிடித்துப்போனதாகவும் கூறினார். பின்னர் திடீரென என் முழங்காலில் மண்டியிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை சொன்னேன். அதற்கு அவர், "உன் கணவன் சரியானவன் அல்ல, நான் உன் குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன்" என்றார். உடனே நான் சத்தம் போட்டு அலறினேன். ஆனாலும் சிறை என்பதால் எனக்கு பயமாக இருந்தது. எப்படியாவது அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். பின்னர் எப்படியோ ஏஞ்சல் என்னை வெளியே அழைத்து வந்துவிட்டார்.

பிறகு என்னிடம் அவள் ரூ.2 லட்சம் பணம் அன்பளிப்பாக தந்தாள். அவளுடைய கைக்கடிகாரத்தையும் கழற்றித் தந்தாள். நான் மும்பைக்கு சென்றபிறகு எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. திகார் சிறைக்காட்சிகள் தங்களிடம் வீடியோவாக இருப்பதாகவும், அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி ரூ.3 லட்சம் பணத்தை என்னிடம் பறித்து விட்டனர்.

சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு 2,3 முறை தொலைபேசியில் பேசியுள்ளார். என் குழந்தைகளை அக்கறையாக விசாரித்து, எனக்கு ஏதாவது தேவையா? என்றும் கேட்டுள்ளார். இந்த சம்பவங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் ரூ.200 கோடி மோசடி பற்றிய செய்திகள் வந்தன. அதன்பிறகே சுகேஷ் யார்? ஏஞ்சல் யார்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு சாகத் கன்னா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்