உயர் அதிகாரிகளின் தொடர் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு சாவு

உயர் அதிகாரிகளின் தொடர் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்தும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.;

Update: 2023-06-14 18:45 GMT

பெங்களூரு:

உயர் அதிகாரிகளின் தொடர் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்தும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அதிகாரிகள் தொல்லை

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் விவேக் குமார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனம் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இவர் வேலைக்காக அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் பணி செய்யும் அலுவலகத்தில், அவரது உயர் அதிகாரிகள் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலையில் அவர் வீட்டின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியினர் உடனடியாக எச்.ஏ.எல். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஒரு அறையில் விவேக் குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அவர்கள் உடனடியாக அவரது உடலை மீட்டனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது செல்போனை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் விவேக் குமார், தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

யூ-டியூப்பில் பதிவேற்றம்

அதில் தனது நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சிலர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறி இருந்தார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறினார். மேலும் தனது தற்கொலைக்கு நிதிஷ் உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். பின்னர் அந்த வீடியோவை விவேக் குமார் தனது யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அந்த செல்போனை மீட்ட போலீசார், அதை தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதிஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் கொடுமை தாங்க முடியாமல் ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்