புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் விபரீத முடிவு

மங்களூருவில் கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-23 21:58 GMT

மங்களூரு:

மங்களூருவில் கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதல் திருமணம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த திவ்யா (வயது 26) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திவ்யா அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் ஆட்டோ டிரைவர் ஆவார்.

திருமணம் முடிந்த புதிதில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் தனது மனைவி திவ்யாவுடன் பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடித்துவிட்டு திவ்யா வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் ஹரீஷ் செல்லவில்லை. நீண்ட நேரமாகியும் ஹரீஷ் வீட்டுக்கு வரவில்லை. போன் செய்தாலும் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஹரீஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது திவ்யா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூரத்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை

பின்னர் போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திவ்யாவின் பெற்றோர் சூரத்கல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்