எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பண பரிமாற்றம் குறித்து விசாரித்து தகவல் பெற்றதாக கூறப்படுகிறது.

Update: 2022-11-16 18:45 GMT

பெங்களூரு:

எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பண பரிமாற்றம் குறித்து விசாரித்து தகவல் பெற்றதாக கூறப்படுகிறது.

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கைது

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 545 சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) பணி இடங்களுக்கு தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் நியமன பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத் பால், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் உள்பட 102 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஜூலை 4-ந் தேதி அம்ருத்பால் கைது செய்யப்பட்டு இருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அம்ருத்பாலும், சாந்தகுமாரும் மூளையாக செயல்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேருக்கும் ரூ.1.35 கோடிக்கு மேல் பணம் கைமாறி இருந்தது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களிடம் இருந்து ரூ.4 கோடி ரொக்கம் சிக்கி இருந்தது. இதுபற்றிய தகவல்களை சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே அமலாக்கத்துறைக்கு தெரிவித்து இருந்தார்கள்.

அமலாக்கத்துறை சோதனை

இதையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அம்ருத்பால், சாந்தகுமார், ஹர்ஷா, ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அம்ருத்பால், சாந்தகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 11 இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

இது அம்ருத்பாலுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஏற்கனவே சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை 3 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவர் முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து இருந்தனர்.

அம்ருத்பாலிடம் சி.ஐ.டி. விசாரணை

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பாலை சி.ஐ.டி. போலீசார், கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று காவலில் எடுத்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள சி.ஐ.டி. போலீஸ் தலைமை அலுவலகமான கார்டல் பவனில் வைத்து நேற்று அம்ருத்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அஞ்சுமாலா தலைமையிலான போலீசார், அம்ருத்பாலிடம் விசாரணை நடத்தினார்கள்.

பண பரிமாற்றம் குறித்து...

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறையில் கைமாறிய ரூ.1.35 கோடி குறித்தும், பினாமி பெயரில் அவர் சொத்து சேர்த்திருப்பது, பிற பண பரிமாற்றங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சி.ஐ.டி. போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சில தகவல்களை அளித்ததாகவும், அதுபற்றியும் அம்ருத்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அம்ருத்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்