வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர் காயம்; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயம் அடைந்தான்.

Update: 2022-06-20 14:26 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் 4-ம் வகுப்பு அறையில் மேல்தளத்தின் கான்கிரிட் சிமெண்டு பூச்சு சிறிது பெயர்ந்து விழுந்தது. இதில் பரத் என்ற மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவர் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதற்கிடையில் பள்ளியில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்