மனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி கணவர் நகைகளை எல்லாம் வாங்கி முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.;

Update: 2024-04-26 11:30 GMT

புதுடெல்லி:

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர், விவாகரத்து கோரி குடும்பநல நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன், திருமணத்தின்போது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய நகைகளின் மதிப்பு மற்றும் ரொக்கப்பணத்தை மீட்டெடுக்க மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

"திருமணத்தின்போது எனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் சீதனமாக வழங்கினர். திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி என் கணவர் நகைகளை எல்லாம் வாங்கினார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் கொடுத்தார். இது குறித்து கேட்டதற்கு அப்போது தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்துள்ளார். இருப்பினும், என் கணவரும் மாமியாரும் எனக்கு சீதனமாக வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர். அவற்றை மீட்டு தரவேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றத்தில், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும் அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கணவர் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அந்த பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை வழங்கியிருக்கிறது. பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின் சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.

அந்த பெண்ணிடம் இருந்து எடுத்து பயன்படுத்திய 89 சவரன் தங்கத்திற்கு நிகராக ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இதை 6 மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்றும் அவரது கணவருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்