போலீசார் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை
ராமநகரில் பெண் தற்கொலை வழக்கில் போலீசார் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ராமநகர்:-
பெண் தற்கொலை
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்சிங். இவரது மனைவி மாதுரி(வயது 28). இவர், கடந்த மாதம்(ஆகஸ்டு) 28-ந் தேதி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். மண்டியா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாதுரி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவர் தற்கொலை செய்யும் முன்பாக சென்னப்பட்டணா போலீசார் மீது செல்போனில் பேசியபடி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
மேலும் ஜோதி என்பவர் மீது சென்னப்பட்டணா போலீசில் புகார் அளித்ததாகவும், ஆனால் தன் மீதே போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறி இருந்தார். இதுகுறித்து சென்னப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீசார் மீது நடவடிக்கை
போலீசார் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு பெண் தற்கொலை செய்தது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னப்பட்டணா புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்த மாதுரி மீது ராமநகர், பெங்களூருவில் கூட பண மோசடி வழக்குகள் உள்ளது. மாதுரிக்கும், ஜோதிக்கும் இடையே பணப்பிரச்சினை இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதுபற்றியும் விசாரித்து வருகிறோம். போலீசார் மீது மாதுரி குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். இதனை தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் தவறு செய்திருந்தாலோ, மாதுரியை தற்கொலைக்கு தூண்டி இருந்தாலோ, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தான் விசாரணை தொடங்கி உள்ளது. போலீசார் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.