சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-16 14:22 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கெஜ்ரிவால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், அகிலேஷ் யாதவ் பதிலளித்தார். அப்போது அவர், "விவாதிப்பதற்கு இதை விட பல்வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன" என்றார்.

இந்நிலையில் சுவாதி மாலிவாலை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஒரு பெண்ணுக்கு எதிராக குற்றம் நடந்தால், குற்றத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் இதையே கூறினார். காங்கிரஸ் கட்சியும் அதே கருத்தை கூறுகிறது.

டெல்லி மகளிர்  ஆணையத்தின் தலைவராக இருந்த சுவாதி மலிவால், தனது சட்ட உரிமைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர். அநேகமாக அவர்தான் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருப்பார். இனி சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்."

இவ்வாறு ராகிணி நாயக் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்