ரன்வேயில் நுழைந்த தெரு நாய்.. தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விஸ்தாரா விமானம்

ஓடுபாதையில் தெரு நாய் நுழையும் நிகழ்வு எப்போதாவது நடைபெறும் என்று விமான நிலைய இயக்குனர் எஸ்விடி தனம்ஜெய ராவ் தெரிவித்தார்.

Update: 2023-11-14 09:00 GMT

பனாஜி,

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவில் உள்ள தபோலிம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.55 மணிக்கு விஸ்தாரா விமானம் புறப்பட்டு வந்தது. கோவாவில் உள்ள இந்த விமான நிலையம் கடற்படையின் ஐஎன்எஸ் ஹன்சா தளத்தின் ஒரு பகுதியாகும்.

தபோலிம் விமான நிலையத்தை நெருங்கிய விஸ்தாரா விமானம், தரையிறங்கும் சமயத்தில் ஒரு தெருநாய் ஓடுபாதையில் (ரன்வே) நிற்பதை பார்த்த விமான நிலைய அதிகாரி, கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி, விமானியை தொடர்பு கொண்டு விமானத்தை சற்று நேரம் தரையிறக்காமல் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விமானியோ, பெங்களூருவுக்கே விமானத்தை திருப்ப விரும்பினார். அதன்படி, விஸ்தாரா விமானம் பெங்களூருக்கு சென்றது. மீண்டும் பெங்களூரில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாலை 6.15 மணிக்கு கோவாவுக்கு வந்தடைந்தது.

இதுபற்றி விமான நிலைய இயக்குனர் எஸ்விடி தனம்ஜெய ராவ் கூறுகையில், 'ஓடுபாதையில் தெரு நாய் நுழையும் நிகழ்வு எப்போதாவது நடைபெறும். ஆனால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும். இது போன்ற சம்பவம் நடப்பது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவே முதல் முறை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்