காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு: இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசி தாக்குதல்

காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-25 08:54 GMT

புதுடெல்லி,

நேபாள எல்லையில் ஓடும் காளி அல்லது சாரதா ஆற்றின் கரையில் தார்ச்சுலா நகரம் அமைந்துள்ளது. காளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தார்ச்சுலா நகரம் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதனையடுத்து தார்ச்சுலா நகரத்தின் பாதுகாப்புக்காக காளி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த தடுப்பு சுவர் கட்டுவதற்கு நேபாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், காளி ஆற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழிலாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, கட்டுமான பணியில் ஈடுபடும் இயந்திரங்களை சேதப்படுத்துவது என நேபாளிகள் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய எல்லைக்குள் ஒரு இந்திய நகரத்தை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடுப்பு சுவர் எழுப்புவதற்கு எல்லா வகையில் உரிமை உள்ளது. ஆகையால் தடுப்பு சுவர் கட்டுகிறோம் என்பது தார்ச்சுலா நகர மக்களின் கருத்து ஆகும். ஆனால் இது தங்களுக்கு அநீதியை ஏற்படுத்துகிறது என கூறி நேபாளிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய கல்லெறி சம்பவங்கள் ஏற்கனவே 10 முறை நிகழ்ந்துள்ளன.

இதனையடுத்து இந்தியா-நேபாள அதிகாரிகள் இந்த எல்லை பதற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் நேபாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நேபாள அரசாங்கம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் நேபாள எல்லைக்கு சரக்கு வாகனங்களை இந்திய லாரிகள் கொண்டு செல்லாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் நேபாளிகள் தொடர்ந்து இத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்