சட்டவிரோத கல்குவாரி நிறுவனங்களை முறைப்படுத்த முதல்-மந்திரி சித்தராமையா திட்டம்

கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரி நிறுவனங்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.;

Update: 2023-07-27 21:17 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரி நிறுவனங்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

தீர்வு காண வேண்டும்

முதல்-மந்திரி சித்தராமையா நேற்று கனிம வளத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் அத்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

புதிதாக தொழில் தொடங்க முன்வரும் கனிம தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வளம், வனம், வருவாய்த்துறை மந்திரிகள் மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி கனிம தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஒற்றைசாளர முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

விவசாயிகள் விற்பனை

வனத்துறையின் அனுமதிக்காக கோப்புகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். கனிம தொழில் நிறுவனங்கள் வனத்திற்கு தேவையான நிலத்தை ஒதுக்காததே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். யானைகள் தாக்குதலால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலங்களை விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள். அத்தகையவர்களிடம் அந்த நிறுவனங்கள் நிலத்தை வாங்கி வனத்துறைக்கு ஒப்படைக்கலாம். இதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும்.

சட்டவிரோத கனிம தொழிலால் உற்பத்தி செய்யப்பட்ட 27 லட்சம் டன் இரும்பு தாது வனத்துறை பகுதியில் உள்ளது. இவற்றை விற்பனை செய்ய சட்ட ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரி நிறுவனங்களின் சட்டவிரோத செயல்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அபராதம் விதித்து ஒரு முறை தீர்வு வழங்குவதற்கான கோப்பு தயார் செய்து மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, தோட்டக்கலை, கனிம வளத்துறை மந்திரி எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்