பங்கு வர்த்தகம்; சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 447 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 292 புள்ளிகளாக காணப்பட்டது.
மும்பை,
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின்னர் தொடங்கிய வாரத்தின் முதல் நாள் பங்கு வர்த்தகம் லாபத்துடன் உயர்ந்து இருந்தது. கடந்த வாரம் இறுதியில், மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் 59,845.29 புள்ளிகளுடன் முடிவடைந்து இருந்தது.
இந்நிலையில் வார முதல்நாளான இன்று, சென்செக்ஸ் குறியீடு 59,755.08 புள்ளிகளுடன் தொடங்கியது. இதன்பின்பு சென்செக்ஸ் மதிப்பு காலை 9.40 மணியளவில் 447.68 புள்ளிகள் வரை உயர்ந்து 60,292.97 புள்ளிகளாக காணப்பட்டது. அதிக அளவாக 60.307.94 புள்ளிகள் வரை சென்றது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு இன்று 100 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிப்டி குறியீடு காலையில் 17,950 புள்ளிகளாக காணப்பட்டது.
நிப்டியில் வங்கி, தானியங்கி, உலோகம், ஊடகம், ஐ.டி. உள்ளிட்ட பல துறைகளும் இன்று காலை லாபத்துடனேயே தொடங்கின. மருந்து துறை சற்று சரிவுடன் காணப்பட்டது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் நிறுவனங்களின் வரிசையில் அதானி என்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்டவை லாபத்துடன் தொடங்கின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த வாரம் நிறைவடைந்த ரூ.82.85 என்ற மதிப்பை விட 0.11 சதவீதம் உயர்ந்து வர்த்தக தொடக்கத்தில், 82.77 என்ற அளவில் இருந்தது.