விரட்டி விரட்டி கடிக்கும் தெருநாய்கள்.. அருணாசல பிரதேச இரட்டை தலைநகர மக்கள் அச்சம்
வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இட்டாநகர்:
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் இரட்டை தலைநகரமான இட்டாநகர், நஹர்லாகுன் ஆகிய நகரங்களில் நாய்த்தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென ஆக்ரோஷமடைந்து விரட்டி விரட்டி கடிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த வாரம் மட்டும் 117 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, சில நேரங்களில் சுதந்திரமாக விடுகின்றனர். இந்த நாய்களாலும் மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
நாய்த்தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடப்படாத தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் நாய்க்கடியால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிப்பதாக இட்டாநகர் தலைநகர பிராந்திய துணை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் துணை கமிஷனர் ஷ்வேதா நாகர்கோட்டி மேத்தா, தொடர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும், தவறினால் அந்த செல்லப்பிராணிகள் வெளியேற்றப்படும் என்று துணை கமிஷனர் எச்சரித்துள்ளார். மேலும், செல்லப்பிராணிகளை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வரும்போது, எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், பொது இடங்களில் சுதந்திரமாக திரியவிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.