தீவிரமடையும் கனமழை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருங்கள் - பொதுமக்களுக்கு இமாச்சல் அரசு அறிவுரை

கனமழை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அடுத்த 24 மணி நேரம் வீட்டிலேயே இருக்கும்படி பொதுமக்களுக்கு இமாச்சல பிரதேச முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-07-10 09:42 GMT

சிம்லா,

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவ மழை தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரெயில், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை நீடித்து வருவதால் பொதுமக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்கும்படியும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் இமாச்சலபிரதேச முதல்-மந்திரி சுவிந்தர் சிங் சுஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை மேலும் தீவிரமடையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை, கனமழை காரணமாக இமாச்சலபிரதேசத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்