வியாபாரிக்கு கத்தி குத்து- நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
வியாபாரியை கத்தியால் குத்திய நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
உப்பள்ளி: உப்பள்ளி டவுன் தாஜிபான் பேட்டை கவுளிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற பாபு. இவர் உப்பள்ளி புறநகர் அஞ்சட்டகேரி பகுதியில் பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் நவீன் என்கிற ஷியாம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக், நவீனுக்கு ரூ.50 ஆயிரம் கடனாக கொடுத்தார். இதில் ரூ.10 ஆயிரத்தை மட்டுமே நவீன் திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ரூ.40 ஆயிரம் பணத்தை திரும்ப தரும்படி கார்த்திக், நவீனிடம் கேட்டுள்ளார். ஆனால் நவீன், பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் நவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் கீழே விழுந்து உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நவீனை மீட்டு கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை வலைவீசி தேடி வருகிறார்கள்.