எனக்கு உடல்நிலை சரியில்லாததை அரசியல் எதிரிகள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உருக்கம்

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அரசியல் எதிரிகள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர் என உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசினார்.

Update: 2022-06-24 20:00 GMT

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். சிவசேனா, மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் அவர்கள் தான் உண்மையான சிவசேனாவினர் என உரிமை கோரி உள்ளனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரது அரசு பங்களாவான வர்ஷாவில் இருந்து வெளியேறினார். மேலும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், தொண்டர்கள் கேட்டு கொண்டால் கட்சி தலைவர் பதவியில் இருந்து கூட விலகுவேன் என உருக்கமாக பேசினார்.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் நேற்று காணொலி காட்சி மூலம் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இதற்கு முன் கட்சி 2 முறை பிளவுப்பட்ட போதும் கூட சிவசேனா 2 முறை ஆட்சியை பிடித்து உள்ளது. நான் முதல்-மந்திரி பங்களாவான வர்ஷாவை தான் காலி செய்து இருக்கிறேன், மன உறுதியை அல்ல. கடந்த 2½ ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை நிலவி வருகிறது.

சமீபத்தில் நான் முதுகு தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டேன். அதற்காக அவசரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அப்போது ஆதித்ய தாக்கரேவும் ஐரோப்பாவில் இருந்தார். இதை அரசியல் எதிரிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளனர்.

நான் முதல்-மந்திரி ஆன 2 மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கியது. அது ஓரளவு சரியான நிலையில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். அதனால்தான் என்னால் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முடியவில்லை.

உங்களுக்கு (ஏக்நாத் ஷிண்டே) கட்சி பெரிய இலாக்காவை (நகர்புற மேம்பாட்டு துறை) வழங்கியது. உங்கள் மகனையும் எம்.பி.யாக்கியது. ஆனாலும் நீங்கள் கட்சிக்கு துரோகம் செய்து உள்ளீர்கள். அதிருப்தியாளர்கள் கட்சி பெயரையோ, பால் தாக்கரே படத்தையோ பயன்படுத்த கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால் சிவசேனா பெயரை பயன்படுத்தாமல் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று காட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்