மைசூரு மாவட்டத்தில் விளையாட்டு போட்டி
மைசூரு மாவட்டத்தில் தசரா விழாவையொட்டி 5 இடங்களில் விளையாட்டு போட்டி நடக்கிறது.
மைசூரு
விளையாட்டு போட்டி
மைசூரு தசரா விழா இந்த ஆண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்தநிலையில் தசரா விழாவையொட்டி ஆண்டுதோறும் மைசூரு மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டி மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் மைசூரு மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று முதல் வருகிற 26-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
அதன்படி மாவட்டத்்தில் நஞ்சன்கூடு, எச்.டி.கோட்டை, சரகூரு, கே.ஆர்.நகர், சாலி கிராமம் ஆகிய 5 தாலுகாக்களில் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
4 நாட்கள் நடக்கிறது
இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு தசரா விழவையொட்டி தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இதில் ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், வெற்றி பெறும் நபர்கள் மைசூருவில் நடைபெறும் தசரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள்.
22-ந் தேதி நஞ்சன்கூடுவில் உள்ள தாலுகா மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
23-ந் தேதி சரகூரு தாலுகாவில் உள்ள பால் பெல்ட் மைதானம் மற்றும் லைன் பள்ளி வளாகத்திலும் போட்டிகள் நடைபெற உள்ளது.
பரிசு வழங்கும் நிகழ்ச்சி
24-ந் தேதி எச்.டி. கோட்டை டவுனில் உள்ள விளையாட்டு அரங்கத்திலும், 25-ந் தேதி சாலிகிராமம் சுஞ்சனா கட்டே ஜே.எஸ்.எஸ் கல்வி மையம் வளாகத்திலும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதேநாளில் கே.ஆர். நகர் தாலுகாவிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
வருகிற 26-ந் தேதி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.