புத்தாண்டையொட்டி கர்நாடக கோவில்களில் சிறப்பு பூஜை
புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. அதுபோல தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.;
பெங்களூரு:
சிறப்பு பூஜை
2022-ம் ஆண்டு முடிந்து நேற்று 2023-ம் ஆண்டு பிறந்தது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று அதிகாலை பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்த நிலையில் புத்தாண்டையொட்டி கர்நாடகம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது கிராசில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், பெருமாள் கோவில், ராமமந்திராவில் உள்ள ராமர் கோவில், மல்லேசுவரத்தில் உள்ள காடு மல்லேசுவரா கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், பனசங்கரி அம்மன் கோவில், ஆர்.ஆர்.நகரில் உள்ள ராஜராஜேசுவரி கோவில், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் உள்ள காட்டி சுப்பிரமணியா கோவில்.
சிறப்பு பிரார்த்தனை
மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், மங்களூருவில் உள்ள கத்ரி சுப்பிரமணியா கோவில் உள்பட மாநிலம் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இருந்தது.
இதுபோல புத்தாண்டையொட்டி பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரி பசிலிகா, மைசூருவில் உள்ள செயின்ட் பிலோமினா உள்பட மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சுற்றுலா தலங்களில்...
மேலும் புத்தாண்டையொட்டி மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க், லால்பாக் பூங்காக்கள், நேரு கோளரங்கம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
இதுதவிர மைசூருவில் உள்ள உயிரியல் பூங்கா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, குடகு, சிவமொக்காவில் உள்ள ரெசார்டுகளில் மக்கள் குவிந்தனர். தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களில் கடலில் குளித்தும், படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.