ஆடி கிருத்திகையையொட்டி கர்நாடகத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகையையொட்டி கர்நாடகத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2022-07-23 21:36 GMT

பெங்களூரு:

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை முருகனுக்கு சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடிகிருத்திகையையொட்டி ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக்கில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், ஸ்ரீராமபுரம் பாசியம் நகரில் உள்ள முருகன் கோவில், அல்சூரில் உள்ள சுப்பிரமணியா கோவில்.

சேஷாத்திரிபுரம் குமார பார்க்கில் உள்ள முருகன் கோவில், அனுமந்தநகரில் உள்ள முருகன் கோவில், ஆர்.ஆர்.நகரில் மலை மீது அமைந்து உள்ள 6 முகம் கொண்ட முருகன் கோவில், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகாவில் உள்ள காட்டி சுப்பிரமணியா கோவில் உள்பட பெங்களூருவில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை முதலே நீண்ட தூரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அரோகரா கோஷம்

மேலும் விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், உருளு சேவை நடத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பல்வேறு கோவில்களில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் அருள்பாலித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதுபோல பக்தர்களின் அரோகரா.... அரோகரா.... கோஷமும் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெங்களூரு ஜாலஹள்ளி மேற்கு கதன் நகரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலிலும் நேற்று ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள முருகன் கோவில், குக்கே சுப்பிரமணியா கோவில், சந்தூர் சுப்பிரமணியா கோவில் உள்பட கர்நாடகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவில்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்