சோனியா காந்தியை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
சோனியா காந்தி மைசூருவிலேயே ஓய்வு எடுப்பதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.;
மைசூரு:
மைசூருவுக்கு வந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை வரவேற்ற டி.கே.சிவக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரைக்கு பலம் சேர்க்கும் விதமாக சோனியா காந்தி மைசூருவுக்கு வருகை தந்துள்ளாா். குடகு மாவட்டத்தில் தான் அவர் 2 நாட்கள் ஓய்வெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மோசமான வானிலை காரணமாக மைசூருவில் இருந்து ஹெலிகாப்டரில் சோனியா காந்தியால் செல்ல முடியவில்லை. அவரது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, மைசூருவில் இருந்து குடகுக்கு கார் மூலமாகவும் பயணிக்க முடியவில்லை. இதையடுத்து, குடகில் தங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்திலேயே சோனியா காந்தி 2 நாட்கள் தங்கி இருந்து ஓய்வெடுக்கிறார். மைசூரு, குடகு மாவட்டத்தை சேர்ந்த 15 காங்கிரஸ் பிரமுகர்கள் மட்டுமே சோனியா காந்தியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை. தசரா பண்டிகை காரணமாக 2 நாட்கள் பாதயாத்திரை நடத்தப்படாது. வருகிற 6-ந் தேதி பாதயாத்திரை நடக்கிறது. எங்கிருந்து பாதயாத்திரை தொடங்குகிறதோ, அங்கு சோனியா காந்தியும் கலந்து கொள்கிறார். அவருக்கு மாலை அணிவிக்கவோ, மரியாதை செலுத்தவோ அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.