மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் சோனியா: ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டி?
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இனிமேல் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனவும், இதுதான் எனது கடைசி தேர்தல் என்றும் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது அவர் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகிறது.இதில் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கானும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார் என தெரிகிறது.
இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகி இருக்கும் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அந்த இடத்துக்கு தேர்தல் நடக்கிறது. இமாசல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால், இந்த காலியிடத்தில் சோனியாவை தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ஆலோசனை நடந்தது. இதில் சோனியா, கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சோனியாவை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என மாநில எதிர்க்கட்சி தலைவர் திகா ராம் கூறியுள்ளார்.இது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் உயர்மட்ட குழுவுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறிய அவர், ராஜஸ்தானில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டால், கட்சியினர் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே தனது மக்களவை தொகுதியான ரேபரேலியை மகள் பிரியாங்காவிற்காக விட்டு கொடுத்து அவரை போட்டியிட வைக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனது அமேதி தொகுதியை விட்டு வெளியேறிய ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இம்முறை அதே தொகுதியில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.