மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்

சோனியா காந்தி 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-02-14 08:52 GMT

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பி.க்கள் 56 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.

இதற்கான தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதற்காக பா.ஜனதா, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரபூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சோனியா காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.

இந்நிலையில், சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சட்டசபை வளாகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், சோனியா காந்தி சட்டசபையின் எதிர்க்கட்சி முகப்பில் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 1999-ம் ஆண்டு பதவியேற்றார். அதன்பிறகு அவர் 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்