மற்றொரு ஆபாச வீடியோ வெளியானது; மடாதிபதி தற்கொலையில் சாமியார்கள் சிலருக்கும் தொடர்பு- போலீசார் தீவிர விசாரணை
ராமநகரில் மடாதிபதி தற்கொலையில் சில சாமியார்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரது 2-வது ஆபாச வீடியோவும் வெளியாகி உள்ளது. அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
மடாதிபதி தற்கொலை
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் பசவலிங்க சுவாமி. இவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. இதுகுறித்து முதலில் குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு மாகடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், மாகடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மடாதிபதியை ஹனிடிராப் முறையில் சிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பின்னணியில் 3 பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் மடாதிபதி ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஒரு பெண்ணின் முகமும் வீடியோவில் தெரிந்திருந்தது.
மற்றொரு வீடியோ வெளியானது
இதையடுத்து, அந்த பெண் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர். மற்ற 2 பெண்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவும், அவர்களை அடையாளம் காணும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், மடாதிபதி ஆபாசமாக இருப்பது, பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளில் பேசும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மடத்தின் விவகாரம் தொடர்பாக பசவலிங்க சுவாமிக்கும், ராமநகரில் உள்ள சில சாமியார்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கு பின்னால் 8 சாமியார்கள் இருப்பதாகவும், அதுபற்றி மடாதிபதி எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ராமநகரில் உள்ள சில சாமியார்களை பிடிக்க விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
26-ந் தேதி வெளியிடுவதாக...
அதே நேரத்தில் மடாதிபதி பசவலிங்க சுவாமியின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்து வந்ததால், தனது மரியாதை கெட்டு போய் விடும் என்பதால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்களை சிலர் கடந்த 26-ந்தேதி வெளியிடுவதாக மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மடாதிபதி கடந்த 24-ந் தேதி மடத்தில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து மாகடி போலீசார் விசாரித்து தகவல்களை திரட்டி வருகிறார்கள்.