பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது - முன்விரோதத்தில் துப்பாக்கியை திருடி சுட்டுக் கொன்றது அம்பலம்
பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.;
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் அடக்கம். இந்த சம்பவத்தில் இறந்த ராணுவ வீரர்கள் தேனி மூணான்பட்டியை சேர்ந்த யோகேஷ்குமார், சேலம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் சில தினங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டது.
முதலில் இந்த சம்பவம், பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று கருதப்பட்டது. பின்னர் ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட குழு மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்ததில், 4 வீரர்கள் சாவில் தொடர்புடைய ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அவரது பெயர் குன்னர் தேசாய் மோகன். இவர்தான் ஆரம்ப கட்ட விசாரணையின்போது, 2 மர்மநபர்களை அந்த பகுதியில் துப்பாக்கி மற்றும் கோடாரியுடன் பார்த்ததாக கூறியிருந்தார். அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது, ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.
அவர்களை ஏன் கொலை செய்தார் என்பது பற்றி அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அது குறித்து பதிண்டா போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
முரணான வாக்குமூலம்
"கொலைக்கான காரணம் குறித்து ஊடகத்தினர் முன்பு விவரித்து கூற முடியாது. இருந்தபோதிலும் மோகன், கொல்லப்பட்ட 4 வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பகை உணர்வு கொண்டிருந்தார். சம்பவம் நடந்த 12-ந்தேதி 2 மர்ம நபர்களை தான் பார்த்ததாக கூறினார். அவர்களின் முகம் மற்றும் தலையை துணியால் மூடியிருந்ததாகவும், துப்பாக்கி சூடு நடந்த பிறகுதான், முகாம் அறையில் இருந்து தான் வெளியில் வந்ததாகவும் தனது விளக்கங்களை முன்னுக்குப் பின் முரணாக கூறி வந்தார். ஆனால் அவர் செய்த கொலையை மறைப்பதற்காக சொன்ன கட்டுக்கதைதான் மர்மநபர்களின் நடமாட்ட கதையாகும்.
தொடர் விசாரணைக்குப் பின்பு அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பீரங்கி படையில் பணியாற்றிய மோகன், ஒரு துப்பாக்கியை திருடி வந்து அவர்களை திட்டமிட்டு சுட்டுக் கொன்றுள்ளார்.
அந்த துப்பாக்கி 28 ரவுண்டுகள் சுடக்கூடிய தோட்டாக்களுடன், சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானதாக புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர் திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தி உள்ளார். முழுக்க முழுக்க தனிப்பட்ட பகை காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டு உள்ளது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை அவர் கழிவுநீர் கால்வாய்க்குள் வீசியுள்ளார். அந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டு உள்ளது."
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.