சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.;

Update: 2022-10-25 06:04 GMT

திருப்பதி,

இன்று மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இன்று காலை 8.11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. வி.ஐ.பி பிரேக் தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.

சூரிய கிரகணத்தன்று சமையல் செய்யக்கூடாது என்பதால் அன்னதான கூடமும் இன்று காலை முதல் மூடப்பட்டதால் பக்தர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்பட்டு வந்த அன்னதானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு சாமிக்கு பரிகார பூஜைகள் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோவில் திறக்கப்படுகிறது.

இதையடுத்து பக்தர்கள் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நவம்பர் 8-ந் தேதி மதியம் 2.39 முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அன்றும் காலை 8.40 முதல் இரவு 7.20 வரை கோவில் நடை சாத்தப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்