சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது - மக்களுக்கு எச்சரிக்கை
வரும் 25 ஆம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரகணம் எனப்படுகிறது. அப்போது வெகு தொலைவில் இருக்கும் சூரியனை அளவில் சிறிய சந்திரன் மறைப்பது போல தோன்றும்.
வரும் 25-ம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும். இந்தியாவில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கும் சூரிய கிரகணத்தை பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும்.
அந்தமான் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் முடிவடைகிறது. கிரகணம் முடிவடைவதை இந்தியாவில் காண முடியாது.
அதிகபட்சமாக கிரகணம் வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை தெரியும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும். கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை தெரியும்.
சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.