ஆடைகளின் பட்டன்களில் மறைத்து நூதன முறையில் போதைப்பொருள் கடத்தல் - மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் 2 நபர்களிடம் இருந்து சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.;
மும்பை,
விமான நிலையங்களில் போதைப்பொருள், தங்கள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்பவர்களை கண்டறிய பல்வேறு நூதன சோதனை முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றையும் மீறி கடத்தல்காரர்கள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் போதைப்பொருள் கடத்திய நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்படி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர், ஆவண கோப்புகளில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் இருந்து ரூ.31.29 கோடி மதிப்பிலான 4.47 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்ததாக, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் இருந்த உடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பட்டன்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, அந்த பட்டன்களில் மொத்தம் 1.596 கிலோ கொக்கெயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15.96 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.