டெல்லியில் சற்று மேம்பட்ட காற்றின் தரம் - கனரக வாகனங்கள் நுழைய அனுமதி
அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 290 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் காற்றின் தரம் 'மிக மோசமான பிரிவு' என்ற நிலையில் இருந்து 'மோசமான பிரிவு' என்ற அளவிற்கு சற்று மேம்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து டெல்லியில் முக்கியமான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், சுரங்கப் பணிகள், டீசல் ஜெனரேட்டர்களுக்கான தடை உள்ளிட்ட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.