15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டுள்ளனர்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடகத்தில் பதுங்கி இருந்த 15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;

Update: 2022-12-10 21:57 GMT

மங்களூரு:

கர்நாடகத்தில் பதுங்கி இருந்த 15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

முதல்-மந்திரி

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தட்சிண கன்னடாவுக்கு வந்தார். அவர் விமானம் மூலம் மங்களூரு அருகே பஜ்பேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பஸ் போக்குவரத்து

சிராடி காட் மலைப்பாதை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நெடுஞ்சாலை ஆணையத்துடன் சிறப்பு கூட்டம் நடத்தப்படும். மராட்டியம்-கர்நாடகம் இடையேயான எல்லைப்பிரச்சினைக்கும் விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும். தற்போது கர்நாடகத்தில் இருந்து மீண்டும் மராட்டியத்திற்கு அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

வருகிற 14-ந் தேதி இரு மாநில முதல்-மந்திரிகளும் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் எல்லைப்பிரச்சினை குறித்து பேச இருக்கிறோம். முன்னதாக வருகிற 12-ந் தேதி(நாளை) கர்நாடக எம்.பி.க்கள் அமித்ஷாவை சந்தித்து எல்லை பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க உள்ளனர்.

15 சிலீப்பர் செல்கள்

பெலகாவியில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைக்க ஒவ்வொரு முறையும் மராட்டிய ஏகிகிரண் சமிதி அமைப்பினர் முயற்சித்து தொல்லை கொடுக்கின்றனர். ஆனால் அதற்கு கர்நாடக அரசு எப்போதும் வாய்ப்பு அளிக்காது. மாநிலத்தில் பதுங்கி இருந்த 15 சிலீப்பர் செல்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களை கர்நாடக போலீசாரும், தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும் தீவிரமாக கண்காணித்து பிடித்துள்ளனர். அவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்