6-வது சட்டசபை தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

6-வது கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றி விவரமாக இங்கு காண்போம்.

Update: 2023-04-03 20:31 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் 6-வது தேர்தல் கடந்த 1978-ம் ஆண்டு நடந்தது. கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டசபை தேர்தல் இது எனலாம். இதில் தொகுதிகளின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு 216 தொகுதிகள் மட்டுமே இருந்தது. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் 189 பொது தொகுதிகளும், 33 ஆதிதிராவிடர் தொகுதிகளும், 2 பழங்குடியினர் தொகுதிகளும் என வரையறுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரசில் ஏற்பட்ட பிளவால் இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்), இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) அணிகளும் களம் கண்டன. ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய குடியரசு கட்சி, இந்திய குடியரசு கட்சி (கோப்ராகடே), அ.தி.மு.க., தி.மு.க., முஸ்லிம் லீக் கட்சி ஆகிய கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 13 ஆயிரத்து 358 பேர் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் 91 லட்சத்து 4 ஆயிரத்து 818 பேர் ஆண் வாக்காளர்கள். 88 லட்சத்து 8 ஆயிரத்து 540 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 28 லட்சத்து 79 ஆயிரத்து 969 பேர் வாக்களித்திருந்தனர். இது 71.90 சதவீதமாகும்.

இந்த தேர்தலில் கர்நாடக சட்டசபையின் 5-வது சட்டசபையில் முதல்-மந்திரியாக இருந்த டி.தேவராஜ் அர்ஸ் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) அணி சார்பில் களமிறங்கினார். அதேப் போல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது. இருப்பினும் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) அணியே இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று கர்நாடக சட்டசபையில் ஆட்சியை பிடித்தது. 214 தொகுதிகளில் போட்டியிட்ட இந்த கட்சி 149 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 212 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) 2 தொகுதிகளிலும், 222 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனதா கட்சி 59 தொகுதிகளிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3 தொகுதிகளிலும், குடியரசு கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி கனியை பறித்திருந்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) கட்சி சார்பில் முதல்-மந்திரியாக டி.தேவராஜ் அர்ஸ் பதவி ஏற்றார். இவர் 1978-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி முதல் 1980-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை முதல்-மந்திரியாக நீடித்தார். அதன் பின்னர் ஆர்.குண்டுராவ் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். 6-வது சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் ஜனதா கட்சி அமர்ந்தது. இந்த கட்சி கடந்த 1972-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக ஜனதா கட்சி கர்நாடகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்தது எனலாம்.

Tags:    

மேலும் செய்திகள்