குஜராத் படகு கவிழ்ந்த சம்பவம்: இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - போலீஸ் கமிஷனர் தகவல்
படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வதோதரா,
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 23 பேரும் 4 ஆசிரியர்களும் சுற்றுலா சென்றனர். அப்போது, அவர்கள் படகு சவாரி சென்றபோது எதிர்பாராத விதமாக ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என 16 பேரை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அந்த பொழுதுபோக்கு மண்டலத்தின் மேலாளர், அந்த பகுதியை குத்தகைக்கு விட்டுள்ள அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வதோதரா காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனுபம் சிங் கெலாட், "படகு கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட 3 பேர் படகு நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றப்பிரிவு மற்றும் பிற குழுக்கள் வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன. மேலும் இது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.