மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காடு மல்லேசுவரம் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-02-18 18:45 GMT

பெங்களூரு:

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காடு மல்லேசுவரம் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

பெங்களூருவில் நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் அருளை பெற்று சென்றனர். மல்லேசுவரத்தில் காடு மல்லேசுவரம் கோவில் உள்ளது. 17-ம் நூற்றாண்டை சார்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும்.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் அதிகாலை முதலே விஷேச பூஜைகள் நடைபெற்றன. கோவில் முகப்பு பகுதியில் பூக்களால் ஆன 15 அடி உயர சிவ லிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனை தரிசித்து சென்றனர்.

ராஜாஜிநகரில்...

இதேபோல் ராஜாஜிநகர் பகுதியில் உள்ள வைகுண்ட கைலாச மகாஷேத்திர கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வீற்றிருந்த சிவலிங்கத்திற்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டன. நேற்று காலையில் நடைபெற்ற பூஜைகளில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர். மேலும் பிரத்யேகமாக வைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பெங்களூருவில் உள்ள கவி கங்காதேஸ்வரா கோவில், கெம்ப்போர்ட் சிவா கோவில், அல்சூர் சோமேஷ்வரா கோவில், 12 சிறிய சிவன் கோவில்களை உள்ளடக்கிய துவாதஷா ஜோதிர்லிங்க கோவில், பேகூர் நாகேஷ்வரா கோவில், கோட்டை ஜலகண்டேஷ்வரா கோவில் பனசங்கரி பகுதியில் உள்ள தர்மகிரி மஞ்சுநாத சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் நேற்று விஷேச பூஜைகள், இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலரும் விரதம் இருந்து சிவனின் அருளை பெற்று சென்றனர்.

காசி விஷ்வநாதர் கோவில்

பெங்களூரு விவேக் நகர் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள காசி விஷ்வநாதர் கோவிலில் 136-ம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருளை பெற்று சென்றனர். இன்று அதிகாலையில் விஷேச பூஜைகளும் அதனை தொடர்ந்து பிற்பகல் 12 மணி அளவில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்