நாடாளுமன்றத்தில் தனி முத்திரை பதித்த சீதாராம் யெச்சூரி
முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பெயர் பெற்றவர் யெச்சூரி.;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி (வயது 72) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய சீதாராம் யெச்சூரி, பொது பிரச்சினைகளுக்காக குறிப்பாக அடித்தட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். பாராளுமன்றத்தில் கடும் இடையூறுகளுக்கு மத்தியிலும், மக்கள் பிரச்சினைகளுக்காக கேள்வி எழுப்பி, தனி முத்திரை பதித்தார்.
மேற்கு வங்காளத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2005-ம் ஆண்டு முதல் 2017 வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், முக்கியமான பிரச்சினைகள் குறித்த கேள்விகளை ஆணித்தரமாக எழுப்புவதற்கும் பெயர் பெற்றவர் யெச்சூரி.
அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆளுங்கட்சி குற்றம்சாட்டியபோதும், தக்க பதிலடி கொடுத்தவர். இடையூறு என்று கூறி அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்று கூறியவர். அத்துடன், நாடாளுமன்ற இடையூறுகள் என்பது ஜனநாயகத்தில் முறையான நடைமுறைதான் என்று கூறி நியாயப்படுத்தினார்.
இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயம், இதுபற்றி மாநிலங்களவையில் சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் பல்வேறு நிபந்தனைகளை பட்டியலிட்டார். மன்மோகன் சிங் அரசு அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தது. ஆனால், அவரது கருத்துக்கள் பிரகாஷ் காரத்தால் நிராகரிக்கப்பட்டன. அந்த ஒப்பந்தமானது கட்சியின் "சுதந்திர வெளியுறவுக் கொள்கை" என்ற கருத்தை மீறுவதாக காரத் கூறினார். இது யெச்சூரிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
2015-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையில் ஒரு திருத்தம் செய்யும் தீர்மானத்தை யெச்சூரி கொண்டு வந்தார். மாநிலங்களவையில் டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மோடி அரசாங்கத்திற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தம் மாநிலங்களவை வரலாற்றில் நான்காவது முறையாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.