கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார் சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு
பெங்களூருவில் இன்று நடைபெறும் விழாவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்கிறார். விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.;
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் அறிவிக்கப்பட்டனர். பின்னர் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார். அதன்படி கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் சித்தராமையாவுடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதாவது காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார்(பீகார்), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாசல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.