சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும்

காங்கிரஸ் கட்சி சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று குருபா சமூகத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2023-05-14 20:11 GMT

பெங்களூரு:-

காங்கிரஸ் வெற்றி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆளும் பா.ஜனதா கட்சி 66 இடங்களிலும், மாநில கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.

போராட்டம்

இருவரும் முதல்-மந்திரி பதவியை பெறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். மேலும் அவரவர் ஆதரவாளர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் சட்டசபை குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில், முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கு கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் சார்ந்த ஒக்கலிகர் சமூகத்தின் கூட்டம் நடந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குருபா சமூகம்

இந்த நிலையில் சித்தராமையா சார்ந்த குருபா சமூகமும் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரசிடம் வலியுறுத்தி உள்ளது. நேற்று குருபா சமூக தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில், குருபா சமூகத்தில் இருந்து 14 பேர் காங்கிரசில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல்-மந்திரியாக ஆதரவு தெரிவிக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு சித்தராமையாவை காங்கிரஸ் முதல்-மந்திரியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

நொடிக்கு நொடி முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்