முதல்-மந்திரி ஆன பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியுடன் சித்தராமையா சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். மேலும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த சித்தராமையா, தசரா விழாவில் விமான கண்காட்சி நடத்தவும் கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு:
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் காலை டெல்லி சென்றார். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில் நாடாளுமன்ற ேதர்தலை எதிர்கொள்வது பற்றியும், மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் இரவில் அவர் டெல்லியில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சித்தராமையா, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது தசரா விழாவின் ஜம்பு சவாரியை நினைவுபடுத்தும் வகையில் யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை இருப்பது போன்ற மரச்சிற்பத்தை நினைவு பரிசாக பிரதமருக்கு அவர் வழங்கினார். அவர்கள் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு தற்போது தான் முதல் முறையாக பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அவர் ஒரு கோரிக்கை மனுவை வழங்கினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா நடைபெற இருப்பதால், பார்வையாளர்களை ஈர்க்கும் விதமான விமான கண்காட்சி நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை அர்த்தப்பூர்வமாகவும், கோலாகலமாகவும் நடத்துவது என்று உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தசரா விழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி விமான கண்காட்சி நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கடந்த 2017, 2019-ம் ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் சிறப்பு விமான கண்காட்சி 'டார்ச் லைட்' அணிவகுப்பு மைதானத்தில் நடத்தப்பட்டது.
இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், கன்னடர்களும் கண்டுகளித்தனர். அதனால் முன்பு போல் தற்போது நடைபெறும் மைசூரு தசரா விழாவில் விமான கண்காட்சி நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் உங்களின் தலையீடு இருந்தால், இந்த விழாவுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழா கா்நாடக மாநில விழாவாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சித்தராமையா, மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்தில் ெநடுஞ்சாலை திட்டங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஒரு கோரிக்கை மனுவை நிதின் கட்காரியிடம் சித்தராமையா வழங்கினார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பசுமை வழிச்சாலைகள், சேட்டிலைட் டவுன் வட்டச்சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கர்நாடகத்தில் 22 ரெயில்வே கிராசிங்கில் சுரங்க பாதை மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.784 கோடி நிதி ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு சாலையோர வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிராடி மலைப்பாதையில் சுரங்க பாதை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான நிதியை ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்க வேண்டும். மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்க வேண்டும். சாலைகளை பராமரித்தல், சரிசெய்தல் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடக சாலைகளை மேம்படுத்த முடியும். கொள்ளேகால், குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு, மைசூரு சாலையை 4 வழிச்சாலையாகவும், கனகபுராவில் இருந்து மலவள்ளி, கொள்ளேகால் வழியாக தமிழக எல்லை வரை 4 வழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 5 இடங்களில் ரெயில்வே கிராசிங்கில் சுரங்க பாதை, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெடுஞ்சாலை திட்டங்களால் கர்நாடகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இந்த கோரிக்கை மனு குறித்து நீங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நினைவு பரிசாக யானை மரச்சிற்பம்
பிரதமர் மோடி மட்டுமின்றி ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, 4 பேருக்கும் மைசூரு தலைப்பாகை அணிவித்ததுடன், உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை நினைவுபடுத்தும் வகையில் யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை இருப்பது போன்ற மரச்சிற்பத்தை நினைவு பரிசாக சித்தராமையா வழங்கினார். இந்த சந்திப்பின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், கர்நாடகத்திற்கான ஜி.எஸ்.டி. நிதியை நிலுவை இல்லாமல் வழங்க சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.