சித்தராமையா-டி.கே.சிவக்குமாரின் தோழமை நீடிக்காது; மந்திரி சுனில்குமார் பேட்டி
சித்தராமையா-டி.கே.சிவக்குமாரின் தோழமை நீண்ட காலம் நீடிக்காது என்று மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
மங்களூரு;
தோழமை நீடிக்காது
மாநில மின்சாரத்துறை மந்திரி சுனில் குமார், உடுப்பியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தாவணகெரேயில் நடந்த பிறந்தநாள் விழாவில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையேயான ஒற்றுமை, கட்டி தழுவியது வலுக்கட்டாயமாகவும், உண்மைக்கு மாறானதாகவும் இருந்தது.
இவர்கள் 2 பேரின் தோழமை நீண்ட காலம் நீடிக்காது. அவர்களுக்குள் கூடிய விரைவில் முறிவு ஏற்படும். அந்த முறிவு எப்போது நடக்கும் என்பதை பார்க்க காத்திருக்க வேண்டும். பிரவீன் நெட்டார் கொலையில் கேரளாவை சேர்ந்தவர்கள் ஈடுபடவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். கொலையாளிகளை கைது செய்ய போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.
தேச உணர்வுடன்...;
75-வது சுதந்திர தின பவளவிழாவையொட்டி உடுப்பியில் 4 லட்சம் தேசியக்கொடிகளும், தட்சிண கன்னடாவில் 6 லட்சம் தேசியக்கொடிகளும் வீடுகள்தோறும் ஏற்ற வினியோகிக்கப்பட உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் தேசியக்கொடிகள் வினியோக பணி தொடங்கும். இதற்கு ஒத்துழைக்கும்படி பொதுமக்களுக்கு, அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே பொதுமக்கள் தேச உணர்வுடனும், ஆர்வத்துடனும் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். கன்னடம் மற்றும் கலாசாரத்துறையின் இணையதளத்தில் ஹர் கர் திரங்கா திட்டம் வார்த்தை இந்தியில் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது நாடு முழுவதும் நடத்தப்படும் திட்டம் என்பதால் எந்தவித சர்ச்சையையும் கிளப்ப தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.