அமித்ஷாவுக்கு சித்தராமையா கண்டனம்
ஒக்கலிகர்-லிங்காயத் இடஒதுக்கீட்டை குறைப்பீர்களா என கேள்வி எழுப்பிய அமித்ஷாவுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மோதலை உருவாக்கும் வகையில் பேசுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு:-
முட்டாள்கள் அல்ல
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, முஸ்லிம்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கினால் ஒக்கலிகா் அல்லது லிங்காயத் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை குறைப்பீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளாா். இந்த கேள்வியிலேயே சாதி-மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கன்னடர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவரது இந்த கருத்தை கண்டிக்கிறேன்.
நாங்கள் ஆதரிக்கிறோம்
தகுதியான சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இட ஒதுக்கீடு உயர்த்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் இட ஒதுக்கீடு பெயரில் மக்களை திசை திருப்பும் பா.ஜனதாவின் முயற்சியை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மொத்த இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதத்தை தாண்ட கூடாது என்று சுப்ரீம் கோா்ட்டு கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இதன் மூலம் இட ஒதுக்கீடு அளவு 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இடைக்கால தடை
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோா்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கர்நாடக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் குஜராத் மாதிரி விஷயம் எடுபடாது என்பதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.