40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற 40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2023-06-27 20:47 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற 40 சதவீத கமிஷன், பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

முதல்-மந்திரி சித்தராமையா ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மீண்டும் விசாரணை

கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சாம்ராஜ்நகர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும். முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், அங்கு 2 பேர் மட்டுமே இறந்ததாக சொன்னார். ஆனால் அதிகம் பேர் இறந்தனர்.

நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதில் அரசு பஸ்களில் இலவச பயண திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்திவிட்டோம். இலவச மின்சாரம் வழங்கும் கிரகஜோதி திட்டத்தை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறோம். கிரகலட்சுமி திட்டத்தை வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி தொடங்குகிறோம். இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு மறுக்கிறது

அன்ன பாக்ய திட்டத்தில் தற்போது ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இன்னும் 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு 2.29 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் இந்த அரிசியை வழங்குவதாக முதலில் கூறிவிட்டு பிறகு அரிசி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். இதில் மத்திய அரசின் சதி அடங்கியுள்ளது.

போதுமான அளவுக்கு அரிசி இருப்பு இருந்தும் கூட அரிசி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தபோது இதுகுறித்து பேசினேன். ஆனாலும் அரிசி வழங்க மறுக்கிறார்கள். ஏழைகள் மீது மத்திய பா.ஜனதா அரசு தாக்குதல் நடத்துகிறது. இலவச அரிசி திட்டத்தை பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, ஆர்.அசோக், பசவராஜ் பொம்மையை கேட்டு அறிவித்து இருக்க வேண்டுமா?.

பேச்சுவார்த்தை நடக்கிறது

பா.ஜனதா, ஏழைகள் விரோத கட்சி. நாங்கள் அரிசி கொள்முதல் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசின் மூன்று நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. நாளை (இன்று) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். தேவையான அரிசி எங்கும் கிடைக்கவில்லை.

அரிசி கிடைத்ததும் 10 கிலோ இலவச அரிசி திட்டம் தொடங்கப்படும். உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். போராட்டம் நடத்த பா.ஜனதாவினருக்கு தார்மிக உரிமை இல்லை. ஏழைகளின் மீது உண்மையிலேயே அக்கட்சியினருக்கு அக்கறை இருந்தால், மத்திய அரசிடம் இருந்து அரிசி பெற்றுத்தர வேண்டும்.

உத்தரவாத திட்டங்கள்

அரசு துறைகளில் காலியாக உள்ள 2½ லட்சம் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப முடியாது. படிப்படியாக அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற ரூ.59 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்களை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

கர்நாடகத்தில் நடைபெற்ற முந்தைய பா.ஜனதா அரசின் முக்கிய ஊழல்களான 5 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதில் நடைபெற்ற முறைகேடு, 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு, கொரோனா நெருக்கடி காலத்தில் மருந்து-உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு, சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்