மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிரதமர் மோடி சுயபுராணம் பாடினால் இதுதான் நடக்கும் - காங்கிரஸ் கருத்து
நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில், தாங்கள் ஆய்வு செய்த பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில், போதிய ஆசிரியர்களோ, மூத்த உள்ளுறை டாக்டர்களோ இல்லை என்று தெரிய வந்ததாக தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் கூறியிருந்தது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மிகுந்த ஆரவாரத்துடன் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 246 மருத்துவக் கல்லூரிகள் எதிலும் போதிய ஆசிரியர்கள் இ்ல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. 50 சதவீத கட்டாய வருகை பதிவேடு விதிமுறையும் பூர்த்தி செய்யப்படவில்லை. இத்தகவலை தேசிய மருத்துவ ஆணையமே தெரிவித்துள்ளது. தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்கவும், சுயபுராணம் பாடுவதற்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.