'ஐ.நா. சபையில் போர் நிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது' - பிரியங்கா காந்தி
மக்கள் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்படும் நிலையில், போரை நிறுத்துவதற்காக ஐ.நா. பொது சபையில் முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜோர்டான் தாக்கல் செய்த இந்த தீர்மானம், பிராந்தியத்தில் உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் தொர்பான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருப்பது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான வாக்கெடுப்பை நமது நாடு புறக்கணித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. நமது நாடு அகிம்சை மற்றும் உண்மை என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. அந்த கொள்கைகளுக்காகத்தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தந்தனர்.
அந்தக் கொள்கைகள் நமது தேசியத்தை வரையறுக்கும் அரசியலைமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அவை, சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் இந்தியாவின் வலிமையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்து, மனிதாபிமானத்தை உடைத்து, லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருள்கள், மின்சாரம் போன்றவைகள் மறுக்கப்படுவதையும், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கொல்லப்படுவதையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது, இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.