காஷ்மீரில் அதிர்ச்சி; 177 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் கசிவு
காஷ்மீரில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் கசிந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சமீப நாட்களாக காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த மே 12ந்தேதி புத்காம் மாவட்டத்தின் சதூரா பகுதியில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, காஷ்மீரை தவிர்த்து வேறு இடங்களுக்கு தங்களை இடமாற்றம் செய்யும்படி கோரி 6 ஆயிரம் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கடந்த மே 1ந்தேதியில் இருந்து இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகளை இலக்குகளாக கொண்டு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், கடந்த வியாழன் அன்று வங்கி ஊழியர் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர் என இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். மற்றொரு தொழிலாளருக்கு துப்பாக்கி சூட்டில் காயம் ஏற்பட்டது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த அரசு பள்ளி கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ரஜ்னி பாலா (வயது 36) என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த மாதம் 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள், புலம்பெயர் தொழிலாளர்களை இலக்காக கொண்டு தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில், வங்கி மேலாளர் படுகொலைக்கு பயங்கரவாத குழு ஒன்று பொறுப்பேற்றதுடன், வெளியூர்வாசிகளை வெளியேறும்படி எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியாக, காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக கொண்டு நடந்து வரும் தொடர் தாக்குதலுக்கு கடந்த ஆண்டே ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியது என்ற அதிர்ச்சி தகவலையும் இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன.
இதனால், தங்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றும்படி அரசு மற்றும் ஆசிரியர் பணியில் இருந்த பண்டிட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றி அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடந்த மறுநாள், இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நீடிக்காத வகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரி பண்டிட்டுகளான 177 ஆசிரியர்களுக்கு, பாதுகாப்பான இடம் என்ற வகையில் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் மாவட்ட தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதில், அவர்கள் அனைவரின் பெயர்களும் தகவல் செயலிகள் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் டாவி பாலத்தில் குவிந்தது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கூறும்போது, எங்களை இடமாற்றம் செய்வதற்கு பதிலாக, பட்டியலை வெளிப்படையாக வெளியிட்டு பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது இந்த அரசு என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.