மத்திய அரசின் திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; மத்திய மந்திரி ஷோபா பேச்சு
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
மைசூரு:
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
சுற்றுப்பயணம்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் 135 இடங்களை பிடித்து காங்கிரஸ் தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் மைசூரு மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய மந்திரி ஷோபா வந்திருந்தார். இதற்காக நேற்று முன்தினமே அவர் மைசூருவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அன்றையதினம் மாலை சாமுண்டீஸ்வரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், அங்கு சிறப்பு பூஜை செய்தார்.
இதையடுத்து நேற்று காலை மைசூருவில் உள்ள மானசா கங்கோத்திரி பகுதியில் உள்ள மாற்று திறனாளிகள் மையத்திற்கு சென்ற அவர், அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அஞ்சல் துறை சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை ஷோபா தொடங்கி வைத்தார்.
வேலை வாய்ப்பு
அப்போது ஷோபா பேசியதாவது:-
மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் துறையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளது. இதேபோல ஒவ்வொரு துறையிலும், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது. அதை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். சுயதொழில் செய்வதற்கும் மத்திய அரசு மக்களை ஊக்குவித்து வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். இதற்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மத்திய அரசின் திட்டங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.