புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையில் இடமாற்ற உத்தரவு: முதல்-மந்திரி அதிரடி
மத்தியபிரதேசத்தில் புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையிலே முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இடமாற்ற உத்தரவை பிறப்பித்தார்.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்ட கலெக்டராக இருந்து வந்தவர், தருண் பட்நாகர்.
இவர் தனது கடமைகளை சரிவர செய்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது அவரையும், அவரைப்போன்று புகாருக்கு ஆளான தாசில்தார் சந்தீப் சர்மாவையும் இடமாற்றம் செய்வதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையும் நடத்தப்படும் என அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட கலெக்டரையும், தாசில்தாரையும் மேடையில் வைத்துக்கொண்டே அவர்கள் மீது நடவடிக்கையை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தது, விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.