ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயர், சின்னத்தை வழங்கிய தேர்தல் கமிஷன் முடிவுக்கு எதிரான மனு மீது 31-ந் தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

Update: 2023-07-10 19:45 GMT

புதுடெல்லி, 

சிவசேனா பெயர், சின்னத்தை ஷிண்டே அணிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியதை எதிர்க்கும் உத்தவ் தாக்கரே மனு மீது வருகிற 31-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

மராட்டிய சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை நட்பு கட்சிகளான பா.ஜனதா- சிவசேனா கூட்டாக சந்தித்தன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட தகராறில் எதிர்பாராத விதமாக கூட்டணி உடைந்தது.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவனோவில் பிளவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து சட்டசபையில் பலத்தை நிரூபிக்காமலேயே முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார்.

சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை ஆதரித்தனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என்று கருதிய இந்திய தேர்தல் கமிஷன், அவரது அணிக்கு கட்சி பெயர் மற்றும் கட்சியின் வில்-அம்பு சின்னத்தை வழங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அதேநேரம் உத்தவ் தாக்கரே அணிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதித்து இருந்தது.

ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி மனு தாக்கல் செய்தது. ஆனால் மனு விசாரணைக்கு வரவில்லை.

இந்தநிலையில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பாக மே 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் தேர்தல் கமிஷன் ஷிண்டே அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வழங்கியது ஏற்புடையது அல்ல. தற்போது தேர்தல்கள் நெருங்கி வருகிறது. எதிர்மனுதாரர் (முதல்-மந்திரி ஷிண்டே) சட்டவிரோதமாக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறார். எனவே ஷிண்டே அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்க்கும் எங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா அடங்கிய அமர்வு நேற்று இதை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.

மேலும் வருகிற 31-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினம் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தேர்தல் கமிஷனால் ஒரு கட்சிக்கு சின்னத்தை ஒதுக்க முடியுமே தவிர, அதற்கு ஒரு கட்சியின் பெயரை மாற்றும் அதிகாரம் இல்லை. சிவசேனா என்ற பெயர் எனது தாத்தாவால் வைக்கப்பட்டது. தேர்தல் கமிஷனால் எப்படி அந்த பெயரை மாற்ற முடியும்?. எனது கட்சியின் பெயரை யாரும் திருட நான் அனுமதிக்க மாட்டேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்